Thursday, May 3, 2007

கவிப்பால்

உழைப்பால்,
உறங்கிட களைப்பால்,
கனவினில் அவள் வந்து அனைப்பாள்.
சிரிப்பால் மனதினை துளைப்பாள்.
உதட்டால் கன்னத்தை நனைப்பாள்.
தலைப்பால் பின் அதை துடைப்பாள்.
உயிரே என்றெனை விளிப்பாள்.
உன்னவள் நானென துடிப்பாள்.

பரபரப்பால்,
பின்வரும் விழிப்பால்,
இது எத்தனை நாளென்ற சலிப்பால்.
அனைத்தையும் சொல்லிட அவள்பால்,
அனுகிட, வியப்பால்,
நின்றவள் விழிப்பாள்.

வாயடைப்பால்,
வார்த்தை தடுப்பால்,
வந்தவழி திரும்ப, வெறுப்பால்,
சுட்டெனை எரிப்பாள்.

புலிப்பால்
இது என்ற நினைப்பால்,
பெண்பால்
இருந்த மனப்பால்,
நிறுத்திட போட்டேன் தாழ்ப்பாள்.

விலகிட இதனின்றி அப்பால்,
கவிதை படைப்பால்,
கவிப்பால்
அதுதரும் களிப்பால்,
பருகுவேன் அனுதினம் தமிழ்பால்.

நிங்காத நினைவுகள்

கண்ணின்றி பார்வையுண்டோ ?
காவலின்றி செல்வமுண்டோ ?
காற்றின்றி ஜீவனுண்டோ ?
காதலின்றி வாழ்வுண்டோ ?

கல்நெஞ்சர் கள்வர் கூட
காதலிலே கரைந்திடுவர்,
கணக்கில்லா காவியங்கள்
காதலுக்கு தீட்டிடுவர்.

காதலில்லா வாழ்க்கையெல்லாம்
காகிதப்பூ மனமென்று
காதலித்த கதையெனதை
கனிவாய் நீர் கேட்டிடுவீர்

கல்லூரி நாட்களில்தான்
கண்டேன் அக்காரிகையை,
காற்றில் வந்த மோகினி போல்,
கால் முளைத்த தேவதை போல்,
காட்சி தந்து சென்று வந்தாள்.

சிங்கத்தின் குகைக்குள்ளே,
சிறுக்கியவள் புகுந்தாலும்
சீறியெழ மறந்திடுமே,
சின்னதொரு புன்னகையில்

முக்காலம் அறிந்திருந்த
மெய்ஞான முனிவர்கூட,
தற்காலம் மறந்திடுவார்
கன்னியவள் கடைவீச்சீல்.

எனில் இக்கால வாலிபன் நான்,
என் செய்வேன் ?

உள்ளத்தில் அவள் நினைவாய்,
உறக்கத்தில் அவள் கனவாய்,
உதிரத்தில் அவள் துடிப்பாய்,
வட்டமிட்டு வட்டமிட்டு,
வனக்குரங்காய் நான் திரிந்தேன்.

மெல்ல மெல்ல அவள் மனது,
கட்டிழக்க துவங்கியது.
உலகம் எமை காதலர்கள் எனும் பெயரில்,
கட்டிவைத்து பூட்டியது.

இருட்டின் போர்வையில்
எங்கள் சந்திப்பு,
வெளிச்சத்து வாழ்வுக்கு ஒத்திகை

கண்ணே, மணியே, கரும்பே,
எனகாதல் மடல் கொடுத்து வாங்கி,
காத்திருந்தோம் மணவறைக்கு.

நீர்சூழ்ந்த வையகத்தில்
நிலையுண்டோ நிம்மதிக்கு ?
சத்தியமாய் இல்லையில்லை
சான்றதற்கு என் வாழ்க்கை.

விதி யென்னும் சதிகாரன்
குறியினிலே அகப்பட்டு,
விபத்தென்னும் பெயரினிலே
விடைபெற்றால் என்னவளும்.

செல்லா காசாய்,
செல்லரித்த ஓவியமாய்
உலகத்தின் பார்வைக்கு,
விந்தையாய்,விநோதமாய் நான்.

ஆழ்கடலில் அடித்து வைத்த
ஆணிவேறாய், அவள் நினைவுகள்

என்றும் நிலைத்திருக்கும்.
கடைசி மூச்சோடு கூடிய,
கட்டாய மரணம் வரை.

கனவுலகில் பறக்கையிலே,
சிறகிழந்த பறவைகள்தான்,
நீங்காத நினைவுகளாய்,
நிலைமாறிப் போயினவோ ?

சுகமான சுமைகள்

சிசுவை சுமப்பது
தாய்க்கு சுகம்.
சிரிப்பை சுமப்பது
உதட்டுக்கு சுகம்

மெய்யை சுமப்பது
நீதிக்கு சுகம்.
பொய்யை சுமப்பது
கவிதைக்கு சுகம்.

நதியை சுமப்பது
நாட்டுக்கு சுகம்.
நம்பிக்கை சுமப்பது
மனசுக்கு சுகம்.

மதியை சுமப்பது
வானுக்கு சுகம்.
விதியை சுமப்பது
அடிமைக்கு சுகம்.

மலரை சுமப்பது
மங்கைக்கு சுகம்.
மாவீரனை சுமப்பது
மண்ணுக்கு சுகம்.

பெருமை சுமப்பது
பேதைக்கு சுகம்.
பணங்காசை சுமப்பது
கருமிக்கு சுகம்.

அச்சம் சுமப்பது
கோழைக்கு சுகம்.
அவள் நினைவை சுமப்பது
என் நெஞ்சுக்கு சுகம்.

அப்போது மட்டும் வா

என் முக அழகிலும்,
உடல் வடிவிலும்,
மனதைத் தொலைத்தவனே,
கடிதம் கிடைத்தது உனது.

கண்டதும் என்மேல்
காதல் வந்ததாய் கிறுக்கல்கள்.

உருவங்கள் ஒதுங்கி,
உள்ளங்கள் உரசி,
உயிர்தீ பிடிப்பது காதல்.

நீயோ கண்களின் சந்திப்பில்
விளையும் காமச் சாயத்தில்,
கரைந்து விட்டாய் போலும்.

ஆர்பரித்து அடங்கிவிடும்
அலையல்ல பெண்.
அத்தனை செல்வமும்
ஆழங்களில் அடக்கி
அமைதி காக்கும் நடுக்கடல்.

நண்பா,
நிஜ உலகில் நின்று,
விறுப்பு வெறுப்பு விவாதித்து,
கருத்து வேறுபாடுகள் கருதி,
பிரிதொருநாள்,
நாமே அறியாமல்,
உனதிருப்புக்கு நானும்,
எனதிருப்புக்கு நீயும்,
எதிர் நோக்கினால்.
எடுத்துச் சொல்வோம்
மென்மையாய்,
காதலிப்பதை.

எப்போதாவது புரியும் உனக்கிது !!
அப்போது மட்டும் வா,
எங்காவது உட்கார்ந்து பேசுவோம்,
புதுக்கவிதை முதல்,
புதுமைபித்தன் வரை.

உயரத்தில் நீ

பிரியமானவளே,

மலைபோல் உயரத்திலிக்கிறாய் நீ
உன் சிகரங்களை எட்ட,
சிறகுகள் இல்லை எனக்கு.
இருந்தும் என்ன,
கடல் அலைபோல்,
நனைத்துக் கொண்டிருப்பேன்,
உன் காலடியை.


உள்ளத்தின் அன்பு,
உயரங்களை கடந்தது.
உயிருக்கு காற்றாய்,
உள்ளத்திற்கு காதல்.

ஸ்வாசித்தலும்,
நேசித்தலும்,
ஸப்தங்களில் தானே
வேறுபடுகிறது.

ஸ்வாஸத்தால் உயிரும்,
நேசத்தால் உலகும்
உயிர்த்திருக்கிறதல்லவா.


கூட்டிக் கழித்து

சரிப்பார்த்தல் கணக்கு
உள்ளங்கள் கூடி
குளிர்ந்து
சுயமிழப்பதல்லவா காதல்.

என்றேனும் ஒருநாள்

என் உள்ளத்தின் பிரார்த்தனைக்கு,
உன் உயரத்தை சுருக்கித் தா.
அன்று நம் வித்தியாசங்கள்
விலகிக் கொள்ளும்,
சம வெளிகளில் சந்திப்போம்.

உயரத்திலேயே நீ
இருந்துக் கொண்டாலும்,
உடைந்து விடமாட்டேன் நான்.

நேசித்ததும், ஸ்வாசித்ததும்,
வசப்படுத்திக் கொள்ள அல்ல,
உன் மூலங்களில் துவங்கிய
என் பார்வைகளால்.
உன் உணர்வுகளை
நான் உளமாற மதித்ததினால்.

முடிவாய் பெண்னே,
என்னை இல்லையேனும்
எவரையாவது நேசி.

நேசிக்க படுவதிலும்,
நேசித்தல் சுகமானது.

கரைந்து போ

இதயமே,
மனசு முழுதும் காதலா ?

மறைக்காமல் சொல்.

சொல்லி விட்டால்
மன நிறைவு.
சொல்லாமல் தங்கி விட்டால்
சுடும் நெருப்பு.

வித்தியசங்களையும்,
விளைவுகளையும் யோசித்து,
நெஞ்சில் ஏன் நெருப்பு சுமக்கிறாய் ?

தவறு வெளிப்படுத்துவதில் அல்ல,
எதிர்ப்பார்த்தலில்.

நேசிக்கிறேன் என்பது யாசிப்பதல்ல,
நெஞ்சில் சுரக்கும் வசந்தத்தை
வாசிப்பது.

உன் நேசம் உண்மையானதா ?

உன்னை நீயே உறுதி செய்.
நிமிர்ந்து செல்,
நேர்கொண்டு சொல்,
வெற்றித் தோல்விகள்
விலகி நில்.

காதல் அன்பின் கடல்,
கரைந்து போ,
அல்லது கரையில் இரு.
நீந்தி பழகிட,
நீச்சல் குளமல்ல அது.

உன்னிலும் மேல்,
உன்னவரை நேசிக்கையில்,
உனதென்பவை அற்று போகும்,

தன்னை இழந்து,
தன்னலம் மற்ந்தவரை,
வெற்றி எங்கே மாலையிடுகிறது ?
தோல்வி எங்கே துன்புறுத்துகிறது ?

எல்லாம் அவன்(ள்)
என்ற எதுவுமற்ற நிலையில்
எங்கிருக்கிறாய் நீ ??

என்னுள் நீ

உறக்கத்தின் ஜன்னல்களிலும்,
தனிமையின் இடைவெளிகளிலும்,
மீண்டும் மீண்டும்,
ஏனோ முகம் காட்டிக்கொண்டே இருக்கிறாய்.

அதுவும் எங்கோ கைகளுக்கு எட்டாமல்,
அடிமனதின் ஆழத்தில்.
அழித்துவிட்டேன் என நான்

ஆசுவாசப்படுகையில்,
சின்ன புன்னகையோடு
எழுந்து வருவாய் வேடிக்கையாய்.

தெரியும் எனக்கு,
உயரத்தில் சுற்றித்திரியும்
உன் பார்வைக்கு,
வெறும் புழுவாய் தெரிவேன் நான்.

அது புரிந்தும்,
உதிர்ந்து போன நினைவுகளுக்கு மத்தியிலும்,
வெட்கமே இல்லாமல்,
உன் எச்சங்களை சுமக்கிறது என் மனம்.